Saturday, 24 March 2012

வேதனை எதற்கு?

சிந்திக்கும் உன்னை சிந்தியாதவர்கள்
நிந்தித்து முந்திக்கொள்வார்கள்
வேறுவிதமாய் அவர்கள் சிந்திப்பதற்கும்
வேராகியது உன் சிந்தைதானே
வேதனை எதற்கு?

Friday, 23 March 2012

முட்டுக்கட்டை

 
பாதுகாப்​பைத் தேடி பதுங்கவேண்டும் என ஓடி
மன்னவனின் எல்லையை விட்டுவிட்டு
மண்னவனின் எல்லைக்குட்படாதே - அவன்
புறமுதுகுக்குப் பின்னால் போர்வீரனாக நில்லாதே
முன்னால் மனிதன் மலையாக இருந்தாலும்
மலையாகப் பின்னால் மனிதன் நின்றாலும்
முன்னேறுவதற்கு அது முட்டுக்கட்டைதான்

Thursday, 22 March 2012

கல்லறை

இயக்கிவிட்டும் இயங்காமல்
தொடங்கிவிட்டும் தொடராமல்
செய்ய அறிந்தும் செயலிழந்து
செய்யாதிருப்பவன் மனதே கல் அறை
கல் அறையும் கல்லறையும் ஒன்றுதான்
கல் அறை உடலுக்குள்ளே கல்லறையில் உடல் உள்ளே

Wednesday, 21 March 2012

உள்ளத்தில் உள்ளவன் ​போதும்

உன் உள்ளத்தில் உள்ளவன் ​போதும்
பாடையில் கிடப்பவன் படையெடுத்து வருவானா
ஆடையே இல்லாதவன் ஆயுதம் ஏந்தி வருவானா
உடையுள்ள நீ உயிருக்குப் பயந்தால்
ஆடையில்லாத அவன் அரசனாகிவிடுவான்
விடையைத் தேடாதே வெற்றி உனக்குத்தான்
குளம் உடைந்தால் அது நீ குளிப்பதற்கு
வெள்ளம் என நினைக்காதே - அதை அடக்க
உன் உள்ளத்தில் உள்ளவன் ​போதும்



Tuesday, 20 March 2012

சிதையாய் சிலைக்கு மாலை

சிந்தித்தவர்கள் பலர் சிதையாகிவிட்டனர்
சிலையாகி வீதியிலே சிற்பங்களாகிவிட்டனர்
சிந்தியாதோர் சிந்தையை சிலையாக்கிவிட்டு
சிதையாய் சிலைக்கு மாலையிடுகின்றனர்

புதைந்துகொள்ளாதே

புயல் அடிக்கிறது என்று புதைந்துகொள்ளாதே
வெளியிலேயே நில் உன்னை அது
வான்வெளிக்குக் கொண்டு செல்லட்டும்
உனது அம்பு எதிரிகளை வீழ்த்தும்
எதிரிகளின் அம்பு உன்னை உயர்த்தும்

 

பாதையில் வருவதற்குப் பயந்து
தவறான பாதையில் செல்லாதே
தவறான பாதையில் செல்பவர்தான்
தனது பாதையைக் காட்ட பயப்படுவர்

 

எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
எதுவும் தெரியாதவரும் எவருமில்லை
எல்லாம் தெரிந்தவர் போல நடிப்பவரும்
எதுவும் தெரியாதவர் போல நடிப்பவருமே
உலகத்தில் அதிகம்